ஸ்ரீவி., மாரியம்மன் கோயில் பூக்குழி விழா துவங்கியது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.இதையொட்டி காலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொடிபட்டம் சுற்றி கொண்டு வரப்பட்டு, கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, காலை 9:45 மணிக்கு அர்ச்சகர் ஹரி கொடிபட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் மண்டபம் எழுந்தருளல், இரவில் அம்மன் சிங்கவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 13 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் மார்ச் 27 மதியம் 1:30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விருதுநகர், தேனி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட பக்தர்கள் தீ மிதிக்கின்றனர். 28 அன்று திருத் தேரோட்டம் நடக்கிறது.தினமும் அம்மன் மண்டகப்படி எழுந்தருளல், இரவில் வீதி உலா நடக்கிறது. கோயிலின் முன் தினமும் இரவு 7 :00 மணிக்கு ஆன்மிகசொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.