திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி!
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முக பெருமானுக்கு, 15 வகையிலான மலர்களால் புஷ்பாஞ்சலி நடந்தது.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது. தினசரி புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், சந்தன காப்பு, திரு ஆபரணம், தங்க கவசம் போன்ற அலங்காரங்கள் நடந்தன. மலைக்கோவில் வளாகத்தில் தினசரி மாலை, பக்தி இன்னிசை கச்சேரிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன.கந்த சஷ்டியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில், புஷ்பாஞ்சலி நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை சேலம், கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து, 15 வகையான மலர்கள் லாரி மூலம் ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.பின்னர் பூக்கூடைகளை முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தோளில் சுமந்து சரவணபொய்கை, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகப் பெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.மாலை 6 மணிக்கு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.இன்று கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 11 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.