வேலில் சுவாமி உருவம்: ரணபலி முருகன் கோயிலில் அதிசயம்!
ராமநாதபுரம்: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் செந்தில் ஆண்டவர் கோயிலிலும், ராமநாதபுரம் மாவட்டம், பெருவயல் ரணபலி முருகன் கோயிலிலும் மாசி உற்சவம் ஒரே நாளில் கொண்டாடப்படுவது சிறப்பு. ரணபலி முருகன் கோயிலுக்கு பெருமை சேர்ப்பது வேலில் முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல். ராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் கிழவன் சேதுபதிக்கு தளபதியாக சாத்தப்பன் என்ற காத்த வீரர் தளவாய் வைரவன் இருந்தார். முருக பக்தரான அவர் திருச்செந்துார் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். முருகன், ஒரு நாள் அவர் கனவில் தோன்றி என்னை வழிபட இனி திருச்செந்துார் வர வேண்டாம்.
தேவிபட்டினம் நவபாஷாணம் உள்ள இடத்தின் மேலே கருடன் வட்டமிடும் அதற்கு கீழ் கடலில் மாலையும், எலுமிச்சை பழமும் மிதக்கும் அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி, தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்து சென்று உனது ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு, என்றார். இதே கனவு உத்தரகோசமங்கை ஆதிமங்களேஸ்வரர் குருக்களுக்கும் தோன்றியது. இருவரும் மறுநாள் சிலையை தேடினர். தளபதி சாத்தப்பன் சிலை மற்றும் வேலை எடுத்து வந்தார். இதையறிந்த மன்னர் அரண்மனையில் தர்பார் மண்டபம் கட்டி வைத்திருந்த பொருட்களை கொடுத்து ஊரணிக்கரையில் முருகன் கோயில் கட்ட நிலம் கொடுத்து உதவினார். திருப்பணிகளுக்கு பின் கடலில் கண்டெடுத்த சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடலுக்குள் இறங்கி சிலை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால் மூலவர் சிவசுப்ரமணியசுவாமி ரணபலி முருகன் எனப்படுகிறார். பக்தர்கள் உள்ளத்தில் ரணம் ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களை பலி செய்து அவர்களுக்கு நன்மை அருள்வதால் ரண பலி முருகன் என்ற பெயர் சிவசுப்ரமணியசுவாமிக்கு பொருத்தமாகிறது. முருகன் உருவம் பொறித்த வேலை பிரமோற்சவம், சூரசம்ஹாரம் நாட்களில் பக்தர்கள் காணலாம். இந்த வேலை வணங்குவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி சகல பாக்கியங்கள் கிட்டும், என்பது நம்பிக்கை.