தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் கோலாகலம்
தீர்த்தமலை: அரூர் அடுத்த, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமகம் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பல சிறப்புகள் வாய்ந்த, இத்திருத்தலத்தின் மாசிமகம் திருத்தேர்விழா கடந்த, 10ல் விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 11ல் கொடியேற்றமும், 13ல் குத்து விளக்கு பூஜை, 15 அன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, மாசிமகம் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், கோவில் முன் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய மூன்று தேர்கள் மீது முத்துக்கொட்டை, பொரி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை தூவி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின், முதலாவதாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, கோவிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இரண்டாவதாக தீர்த்தகிரீஸ்வரர் தேரும், அதற்கடுத்து வடிவாம்பிகை தேரும் இழுத்து வந்து நிலை நிறுத்தப்பட்டது. விழாவில், அரூர் ஆர்.டி.ஓ., கவிதா பங்கேற்றார். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, அரூர் அரசு போக்குவரத்து கிளை பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரூர் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.