பெரிய மாரியம்மன் கோவிலில் விதிமீறி அமைத்த கூடுதல் கடையால் விபத்து அபாயம்
ஈரோடு: ஈரோட்டில், பெரிய மாரியம்மன் கோவில் விழாவில், விதிமீறி அமைத்துள்ள, கூடுதல் கடையால், விபத்து அபாயம் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. இதையொட்டி பிரப் ரோட்டில், தற்காலிக கடைகள் அமைக்க, சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. மொத்தம், 42 கடைகளில், 42வது கடை அமையும் இடம், பஸ் நிறுத்தம் மற்றும் உயரழுத்த டிரான்ஸ்பார்மர் உள்ளதால், அந்த இடத்தில் கடை போட, மின்வாரியம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்த கடைக்கு ஏலம் விடவில்லை. இந்நிலையில் தற்காலிக கடைகள் ஏலம் எடுத்துள்ள ஒருவர், மின் வாரியம், கோவில் நிர்வாக கட்டுபாட்டை மீறி, கடை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். தீப்பொறி பறக்கும் டிரான்ஸ்பார்மர் கீழ், அமைக்கப்பட்டுள்ள கடையால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜாவிடம் கேட்டபோது, கடையை ஏலம் விடவில்லை; உடனடியாக விசாரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
கடை அகற்றல...: கோவில் செயல் அலுவலர் ராஜாவிடம், இந்தக் கேள்வி நேற்று முன்தினம் கேட்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், அப்படி எதுவும் செய்யவில்லை. நேற்றும் கடை அதே இடத்தில் செயல்பட்டது. அரசு அதிகாரிகளின் சொல்லும், செயலும் ஒன்றுபோல் இருந்ததில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமோ?