தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 6ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில், மண்டல பூஜை நடந்து வந்தது. நேற்று முன் தினம் மாலை, சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு, ஹோமம் நடந்தது.நேற்று, உச்சிக்கால பூஜையின் போது, அனைத்து சன்னிதிகளிலும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீரால், மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு விநாயகர், சந்திரசேகரர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.