முத்தாலம்மன் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
வடமதுரை;வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய வழிபாடாக படுகளம் அமைத்து கழுமரம் (வழுக்கு) ஏறும் நிகழ்ச்சி நடந்தது. வடமதுரையில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கடந்த மார்ச் 19ல் முத்தாலம்மன் கோயில் திருவிழா அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கண்திறப்பு, வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளுடன் கோயில் வீடு குடிபுகும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை மாவிளக்கு, பொங்கல் வைத்தல் என நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு படுகளம் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு நடப்பட்ட மூன்று கழுமரங்களிலும் (வழுக்கு மரம்) பாரம்பரிய வழிபாட்டிற்காக ஏறும் உரிமை பெற்ற அம்பலகாரன்பட்டி கிராம இளைஞர்கள் ஏறினர். மர உச்சிகளில் கட்டி வைத்திருந்த காணிக்கை, விபூதி, பழங்களை எடுத்து வந்து பக்தர்களுக்கு வழங்கினர். இன்று மதியம் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் முத்தாலம்மன் திருவிழா நிறைவடைகிறது.