கோவில் பணியாளருக்கு பண்பு பயிற்சி முகாம்
திருப்பூர் : "மனித நேய பண்புடன், கோவில் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும், என, பண்பு பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கான மனித நேயப்பயிற்சி, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் நடந்தது. உதவி ஆணையர் ஹர்ஷினி துவக்கி வைத்து பேசுகையில், ""இறை பணி செய்வதற்கு கிடைத்த அருமையான வாய்ப்பு, கோவில்களில் பணியாற்றுவது. பல்வேறு மன நிலையில், ஆண்டவனை தரிசிக்க, பக்தர்கள் வருகின்றனர்; அவர்களின் மனம் கஷ்டப்படாமல், அன்பாக நடந்து கொள்ள வேண்டும். கோவில் வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற வேண்டும், என்றார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் செல்லதுரை, சண்முகசுந்தரம், விவேகானந்தா பள்ளி ஆசிரியர் கதிரவன், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ரம்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர். செயல் அலுவலர்கள் அழகேசன், நாகராஜ், வெற்றிச்செல்வன் சங்கர சுந்தரேஸ்வரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.