உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது

திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது

வில்லியனுார்: வில்லியனுாரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர்  கோவிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது. வில்லியனுாரில் உள்ள பிரசித்தி பெற்ற     திருக்காமீஸ்வரர் கோவில், 11ம் நுாற்றாண்டில், தருமபால சோழனால் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கோவில் புரனமைக்கும் பணி முடிந்து கடந்த ஜன., 20ம் தேதி  கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவில் திருக்குளம், புதுச்சேரியிலேயே மிகப் பெரிய ஜீவ குளமாகும். தீர்த்த இருதாய நாசினி, இருகைய சமநம், பிரம்ம தீர்த்தம் என்ற   பெயர்களிலும் இக்குளம் அழைக்கப்படுகிறது. இக்குளத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்   தெப்பல் உற்சவம் நடைபெறும். கோவில் புரனமைக்கும் பணியின் போது, இந்த குளத்தையும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 50 லட்சம் வழங்கினார். பொதுப்பணித்துறை தொழில்நுட்ப வல்லுனர் குழு தலைவர்   சத்தியமூர்த்தி மேற்பார்வையில் பணி நடந்து வந்தது. ஆகம விதிப்படி கிழக்கு–மேற்கு 129.3 அடி நீளத்திலும்,   தெற்கு–வடக்கு 159.1 அடி அகலத்திலும் குளம் அமைக்கப்பட்டு,   18 படிகள் கட்டி  முடிக்கப்பட்டுள்ளன.  நடுவில் இருந்த நீராழி மண்டபம் இடிக்கப்பட்டு புதியதாக  கட்டப்பட்டுள்ளது. புதிய குளத்தில் நீர் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.  குளம் நிரம்புதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு மேலாகும்.

திருக்குளத்தின் வரலாறு: நைமிச வனத்தில் முனிவர்கள் பலர் வேள்வி பூஜை செய்து வந்தனர். அவர்கள், சூத முனிவரிடம், மிக்க பாவம் செய்தவர்களுக்கு முக்தி தரும் தலம் ஏதேனும் உள்ளதா என கேட்டனர். அவர், முக்தி தரும் தலம் ஒன்று உள்ளது. இதனை சிவபெருமான் முருக கடவுளுக்கும்,  முருக கடவுள் வியாச முனிவருக்கும், வியாச முனிவர் எனக்கும் கூறியுள்ளார். இந்த தளம், சேது சமுத்திரத்திற்கு வடக்கே 30 யோசனை துாரத்திலும், கீழ் கடலுக்கு மேற்கே அரை யோசனை துாரத்தில் முத்தாறு (சங்கராபரணி ஆறு) இடையே, காமீசுவரம் எனும் திருநாமத்தை பெற்றது. இந்த தலத்தில்இருத்தப நாசினி எனும் தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்ததில் நீராடி,  எந்த நாட்டினரும்,  மிக்க பாவத்தை செய்தவராயினும்,   காமீசம் என்ற திருநாமத்தை உச்சரித்தால், இம்மையில் நினைத்தவற்றை பெருகவித்து, மறுமையில் முக்தியடைவர் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !