செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி ஊர்வலம்
சங்ககிரி: சங்ககிரி, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள், அலகு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். சங்ககிரி சந்தைப்பேட்டையில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன், புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, 14ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி, பால்குடம், பூங்கரகம், மற்றும் காளிவேடம் அணிந்து சங்ககிரியின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாகச் சென்று சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, சேத்து முட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. நாளை காலை, 7:30 மணிக்கு பூ அள்ளிவிடுதல் மற்றும் இரவு மறு பூஜை நடக்கிறது.