பாப்பக்காபட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
குளித்தலை: பாப்பக்காபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த பாப்பக்காபட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான விழாவில், முத்தாலம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூச்சொரிதல் விழா மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பின், கம்பத்திற்கு தொடர்ந்து, 15 நாட்கள் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழாவின் முதல் நாளில், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பால் குடம், தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்றிரவு, மகா மாரியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு, குதிரை வாகனத்துடன் முத்து பல்லக்கில் கரகாட்டம், காவடி ஆட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் கூடிய சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, அலகு குத்துதல், அக்னி சட்டி கரகம் எடுத்தல், தேவராட்டம், சரம் குத்துதல், படுகளம் விழுதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மஞ்சள் நீராடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.