திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா துவக்கம்
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவமான தீமிதி திருவிழா, இன்று காலை, ஜெயக் கொடி மற்றும் பாரத கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் வியாழக்கிழமை, பகாசூரன் கும்பம் படைக்கப்படுகிறது. ஆர்.கே.பே ட்டை – திருத்தணி சாலையில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில், கோடைக்காலத்தில் அக்னி வசந்த உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இதில், மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து இடம் பெறும். இன்று காலை, ஜெயக் கொடி மற்றும் பாரத கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. மதியம், 2:00 ம ணிக்கு, மகா பாரத சொற்பொழிவு நடக்கிறது. பாரத கதையை இன்று முதல், அடுத்த, 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக பக்தர்கள் கேட்க முடியும். வரும் வியாழக்கிழமை இரவு, பகா சூரன் கும்பம் படைக்கப்படுகிறது. தெருக்களில், மாட்டு வண்டியில் வலம் வரும் பீமசேனனுக்கு கும்பம் படைக்கப்படும். இன்று இரவு முதல், தெருக்கூத்து துவங்குகிறது. வரும், 16ம் தேதி, ஞாயிறு, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று, மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் காலை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.