சீதா திருக்கல்யாண வைபோகம் கோலாகலம்
திருப்பூர்: உலக மக்களின் நன்மைக்காக, 100 கோடி ஸ்ரீராம நாம ஜெபத்தின் நிறைவை கொண்டாடடும் வகையில், சீதா கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. திருப்பூர் தொழில் துறையினர் அபிவிருத்தி மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், கோபிநாத் தலைமையிலான குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக, 100 கோடி ஸ்ரீராம நாமம் பாராயணம் செய்து வந்தனர். இவ்விழா நிறைவை கொண்டாடும் விதமாக, சீதா கல்யாண வைபவம் நேற்று, திருப்பூர், திருமுருகன்பூண்டி, பப்பீஸ் தாமரை ஹாலில் நேற்று நடந்தது. கோசல மாமன்னர் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர் ராமச்சந்திரமூர்த்திக்கும், ஜனகரின் புதல்வி சீதா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. லட்சுமணன் - ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ச்ருதகீர்த்தி ஆகிய தம்பதியருக்கும்,திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வரதராஜ பாகவதர் தலைமையிலான குழுவினர், சீதா திருக்கல்யாண வைபோகத்தை நிகழ்த்தி வைத்தனர். பக்தர்கள் பங்கேற்று, சீதா கல்யாண உற்சவத்தை தரிசித்து, மகிழ்ந்தனர்.