ராமானுஜரின் 1,000வது ஆண்டுவிழா - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் உபன்யாசம்
புதுச்சேரி: புதுச்சேரி ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு சார்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் தொடர் உபன்யாசம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் நேற்று உபன்யாசம் செய்து பேசியதாவது: விஞ்ஞானம் என்பது உலகவியல். இதனை சோதனை சாலையில் நிரூபித்து விடலாம். மெய்ஞானம் என்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. சோதனை சாலைகளுக்கு இடமில்லை. மெய்ஞானம் வேதத்தை மூலமாக கொண்டது. விஞ்ஞான ரீதியாக மெய்ஞானத்தை நிரூபிக்க முடியாது. அறிவு என்பது நம்மிடம் உள்ள கை, கால், காது, மூக்கு போன்றதொரு கருவியாகும். கை, கால்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோல், அறிவையும் கருவியாகவே பயன்படுத்துகிறோம்.
விஞ்ஞானத்திற்கு, ஞானம் தான் அடிப்படை. ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் அன்பை, கண்ணாடி குடுவையில் காண்பித்து விட முடியாது. அது போல், மெய்ஞானத்தை ஆய்வுக்கூடத்தில் நிரூபிக்க முடியாது. மெய்ஞானத்தை சாஸ்திரத்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மெய் என்பதற்கு மற்றொருமொறு பொருள் உண்மை. மெய்ஞானம் என்பது உண்மையை பற்றியது. விஞ்ஞானம் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறுதலுக்குட்பட்டது. ஆனால், மெய்ஞானம் என்பது மாறுதலுக்குட்படாமல், அறிவு, ஆத்மா, பரமாத்மாவை பற்றி பேச கூடியது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு அடிப்படையாக இருப்பது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்கள் தான். இவைகள் இல்லாம் எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை. விஞ்ஞானத்திற்கு அடிப்படையாக இருக்கூடிய பஞ்ச பூதங்களை பற்றி தான் மெய்ஞானம் கூறுகிறது. பஞ்ச பூதங்கள் என்றைக்கும் மாறாது. மாறாமல் இருப்பது தான் மெய்ஞானம்.
மெய் என்றால் உடல், ஞானம் என்றால் அறிவு. மெய்ஞானம் என்றால், உடலை பற்றிய அறிவு. மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என விஞ்ஞானம் கூறுகிறது. இதை மெய்ஞானத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. உடம்பு சுகத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் விஞ்ஞானம். ஆத்மாவிற்கு சுகத்தை தருவது தான் மெய்ஞானம். முரண்பட்ட கருத்துக்களை மெய்ஞானம் பேசாது. விஞ்ஞான ரீதியாக மெய்ஞானத்தை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுமானால் ஏற்றுக்கொள்ள வேண்டும். உடம்புக்கு மட்டும் மகிழ்ச்சியை கொடுப்பது விஞ்ஞானம். தேவையே இல்லாமலாக்கி, திருப்தியை கொடுப்பது மெய்ஞானம். விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புகள் தொடரட்டும். அது அனைத்து ஜீவராசிகளுக்கும் பயன்படுமானதாக இருக்கட்டும். இதில், எது மெய்ஞானத்திற்கு தேவைப்படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்வோம். மெய்ஞானத்தை அடைய ராமாநுஜரின் திருவடியை பற்றி வாழ்வோம். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் உபன்யாசம் - video