விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் விழா துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில்விழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. பக்தர்கள் வசதிக்காக நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தற்காலிக கழிப்பறை அமைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும். மாரியம்மன் கோயில்விழா துவங்கியதில் இருந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோயில் வந்து செல்கின்றனர். இவர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீச்சட்டி எடுப்பர். ஏப்ரல் 10ல் நடக்க உள்ள தீச்சட்டி எடுத்தலில் இரவு, பகல் கூட்டம் இருக்கும். 50 ஆயிரம் பக்தர்கள் இதில் கலந்துகொள்வர். இவர்களுக்கு வசதியாக நகரில் பழையபஸ் ஸ்டாண்ட் அருகே, மதுரை ரோடு, மேலரத வீதி, நகராட்சி ரோடு பகுதியில் தற்காலிக கழிப்பறை நகராட்சி சார்பில் அமைக்கப்படும். இரு ஆண்டுகளாக தற்காலிக கழிப்பறை அமைக்காததால் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் சிரமப்பட்டனர். அதேவேளை நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது. இதை தடுக்க, தற்காலிக கழிப்பறைகளை ஆங்காங்கே நகராட்சி சார்பில் அமைக்கவேண்டும். இது தவிர நகரின் எல்லையில் ஊராட்சி பகுதிகளில் அந்தந்த நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறை அமைக்கவேண்டும். இதை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தவேண்டும். தற்போதே தற்காலிக கழிப்பறை செயல்பட்டால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.