செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா
செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன்
ஈரோடு: செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு நேதாஜி சாலை, முனிசிபல் சத்திரம் பகுதி செல்லாண்டியம்மன் கோவிலில், 24ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது. காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், பூச்சாட்டுதல், கங்கனம் கட்டுதல், கொடியோற்றம், பால்குட ஊர்வலம், அக்னி கபாலம், குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. கோவில் கரகத்துடன் ஊர்வலமாக வந்த பூசாரி, கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர், முதலில் குண்டம் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். கையில் குழந்தையுடன் பலர் குண்டம் இறங்கினர்.அதைத் தொடர்ந்து மதியம் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.