ராமநவமியை முன்னிட்டு சீதா ராமருக்கு திருக்கல்யாணம்
தர்மபுரி: ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, தர்மபுரியில் நேற்று சீதா, ராமர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு ஜனன விஷேச பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு, மாதவாச்சாரியார் ஈஸ்வரியம்மாள் திருமண மண்டபத்தில், சீதா ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி அடுத்த வெங்கட்டம்பட்டி பட்டாபிராமர் கோவிலில், காலை, 9:30 மணிக்கு மேல், பட்டாபிராமருக்கு விசேஷ பூஜை மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு, சீதா, பட்டாபிராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சீதா, பட்டாபிராமர், லட்சுமி குபேரன் அவதாரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். இரவு, 8:00 மணிக்கு மேல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல், கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ராமர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்பட்டது.