வேலூர் அருகே சிவலிங்கம் மீது சூரியகதிர் விழும் அதிசய நிகழ்வு
வேலூர்: வேலூர் அருகே, விண்ணம்பள்ளி கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய கதிர் விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த விண்ணம்பள்ளியில், 1,000 ஆண்டுகள் பழமையான, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சூரிய பகவான், தட்சிணாயின காலத்தில் இருந்து உத்ராயண காலத்திற்கு மாறும் போது, பங்குனி, 23ல் துவங்கி, சித்திரை 1 வரை, அகத்தீஸ்வரரை தரிசித்து செல்வதாக ஐதீகம். இந்த காலத்தில், காலை, 6:15 மணிக்கு, சூரியக் கதிர்கள் இந்த கோவிலில் உள்ள, மூன்று நிலைகளை கடந்து, மூலவர் மீது விழுகிறது. அப்போது கருமை நிறத்தில் உள்ள சிவலிங்கம், பொன்னிறமாக மாறி ஜொலிக்கும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், சிவலிங்கத்தின் மீது, சூரிய கதிர்கள் விழும் அற்புத நிகழ்ச்சி, நேற்று காலை, 6:15 மணிக்கு நடந்தது. அப்போது சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய கதிர்கள், 15 நிமிடங்கள் நிலையாக இருந்தது. பின் படிப்படியாக மறைய ஆரம்பித்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என, கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். இந்த அற்புத நிகழ்வு, வரும் 14 வரை நடக்கிறது.