வேலில் சொருகிய எலுமிச்சை ரூ.27 ஆயிரத்திற்கு ஏலம்
உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார் அருகே, கோவில் வேலில் சொருகிய எலுமிச்சை பழம், 27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், பழமையான ரத்தின வேல்முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில், வேல் மட்டுமே இருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், ஒன்பது நாள் திருவிழா நடத்தி, 10ம் நாள் காவடி பூஜை நடக்கிறது. 11ம் நாள் நள்ளிரவில், இடும்பன் பூஜையின் போது, கருவறை வேலில் தினமும் சொருகப்பட்ட எலுமிச்சை பழங்கள், ஏலம் விடப்படும். மார்ச் 31ல், கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர விழா துவங்கி, தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, கருவறை வேலில் சொருகிய, 9 எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. முதல் நாள் எலுமிச்சை பழம், 27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 2, 3ம் நாள் பழங்கள் தலா, 6,000க்கும்; 4ம் நாள் பழம் 5,800; 5ம் நாள் பழம், 6,300; 6ம் நாள் பழம், 5,000; 7ம் நாள் பழம், 5,600; 8ம் நாள் பழம், 3,700; 9ம் நாள் பழம், 2,700 என, 9 பழங்களும், மொத்தம், 68 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலம் கேட்கும் உரிமை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே உள்ளதால், அவர்களை உடன் வைத்து, வெளியூர்காரர்கள் ஏலம் கேட்டனர். பழத்தை வாங்கியவர்கள், கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ஐதீகம் என்ன? : சுவாமிக்கு படையலிட்ட, எலுமிச்சை பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்னை தீரும் என்ற ஐதீகம் உள்ளது. ஏலம் எடுத்த எலுமிச்சை பழத்தை, வீட்டில் படையலிட்டு, விதைகளுடன், மனைவி சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.