உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, நடுகல் கண்டுபிடிப்பு

14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, நடுகல் கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி  கிராம ஏரிக்கரையில், அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கள ஆய்வு நடந்தது. அப்போது, மூன்றாம் குலோத்துங்க
சோழனின், 15ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மற்றும், 14ம்  நூற்றாண்டைச் சேர்ந்த குறுநில மன்னனுடைய நடுகல் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணன் கூறியதாவது:  தேன்கனிகோட்டையைச் சேர்ந்தவர் கொடுத்த தகவலின் படி,  சந்தனப்பள்ளி அருகே ஏரிக்கரையில் கள ஆய்வு செய்தோம். இதில், சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. அதற்கு அடையாளமாக, கருவறை தூண்கள் உள்ளன. கருவறை புதையலுக்காக தோண்டப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் மட்டும் தனியாக தூக்கி வீசப்பட்டுள்ளது. இப்பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட, மூன்றாம் குலோத்துங்க சோழனின், 15ம்  ஆட்சியாண்டு கல்வெட்டில், 13 வரிகள் உள்ளன. அவற்றில், 10  வரிகளை மட்டுமே படிக்க முடிகிறது; கடைசி, மூன்று வரிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள  முடியாதவாறு, பாறை சிதைந்துள்ளது.இப்பகுதியில் கிடைத்துள்ள குறுநில மன்னனின் நடுகல்  சிற்பத்தில், கால்கள் இரண்டையும் மடக்கி, கைகள் இரண்டையும்  மார்புக்கு மத்தியில் குவித்து, தியான முத்திரையுடன் இருக்கிறது.

வலதுபுறத்தில் ஒரு குதிரையும், அதற்கு மேல், பெரிய அளவில்  வெண்கொற்றை குடையும், சிறிய அளவில் மேலும் ஒரு  வெண்கொற்றை குடையும் உள்ளது. மேலும் அதன் அருகில், இரு குடைகள் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, மூன்று  சிறிய சிற்பங்கள், ஒரு பெரிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன.  இடதுபுறம், பெண் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது. இச்சிற்பம்  வீரனின் மனைவியாக இருக்கலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில்,  நான்கு பேர் இசை வாசிப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !