உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

கோவை: புனித வெள்ளியை முன்னிட்டு, கோவையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை, திருச்சிலுவை ஆராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதை நினைவு கூரும் விதமாக, கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும், தவக்காலத்தை கடை பிடித்து வருகின்றனர். சாம்பல் புதனன்று துவங்கும் இந்த தவக்காலம், யேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறுடன் முடிவடைகிறது. இறுதி வாரம், புனித வாரமாக கடை பிடிக்கப்படுகிறது. நேற்று முன்தினம், புனித வியாழனை முன்னிட்டு, கத்தோலிக்க தேவாலயங்களில், பாதம் கழுவும் சடங்கும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. யேசு, சிலுவையில் உயிர் விட்ட நாளாக நினைவு கூரப்படும் புனித வெள்ளி, நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, கோவையிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், காலை மற்றும் மாலையில் இரு பிரிவாக வழிபாடுகள் நடத்தப்பட்டன. பெரியகடை வீதி, புனித மிக்கேல் பேராலயத்தில், காலை, 11:00 மணிக்கு, சிலுவைப்பாதை நடந்தது; மாலை, 5:00 மணிக்கு, திருச்சிலுவை ஆராதனை, திரு வார்த்தை வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்பட்டன.புலியகுளம் புனித அந்தோணியார் திருத்தலம், கோவைப்புதூர் குழந்தை இயேசு தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், ராமநாதபுரம் உயிர்த்த யேசு தேவாலயம், செல்வபுரம் புனித வேளாங்கண்ணி தேவாலயம், காந்திபுரம் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதேபோன்ற வழிபாடுகள் நடந்தன. புனித வெள்ளியை முன்னிட்டு, பல்வேறு தேவாலயங்களிலும் பக்தர்களுக்கு, நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா சடங்குகள், இன்றிரவு 11:00 மணியிலிருந்து துவங்கவுள்ளன. நாளை, ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாககொண்டாடப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !