சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை மேக மூட்டத்தால் காண முடியவில்லை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் சுவாமி மீது, சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வை, மேக மூட்டத்தால் காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் நேர் பின்புறம், கிரிவலப்பாதையில் திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை மாதப்பிறப்பின் முதல் நாளன்று அருணாசலேஸ்வரர் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை முதலே காத்திருந்து வழிபடுவர். அதேபோல், இந்தாண்டின் சித்திரை மாத முதல் நாளான நேற்று காலை, 5:00 மணி முதல், 7:30 மணி வரை திருவண்ணாமலை நகரில் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் சூரிய உதய நேரத்தில் மேக மூட்டம் இருந்ததால், திருநேர் அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.