தமிழ் புத்தாண்டை பொங்கல் வைத்து கொண்டாடிய மலை கிராம மக்கள்
தர்மபுரி: தமிழ் புத்தாண்டை, நகர் பகுதி யில் உள்ள மக்கள் மறந்து வரும் நிலையில், மலை கிராம மக்கள் தங்களது உறவினர்களுடன் கோவில்களில் பொங்கல் வைத்து உற்சாகமாகக்
கொண்டாடினர்.தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. விளையாட்டு போட்டிகள் மற்றும் சித்திரை உழவு உள்ளிட்டவை நடப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாகரீக மாற்றத்தால், ஆங்கில புத்தாண்டு வெகு ஜோராக வளர்ந்து, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் மறைந்து வருகிறது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் உள்ள மக்கள், இன்றளவும் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, வத்தல்மலை, சின்னாங்காடு, ஒன்றிக்காடு, பெரியூர், பால் சிலம்பு உட்பட வத்தல்மலையில்
உள்ள பல்வேறு மலை கிராம மக்கள், புத்தாண்டை கொண்டாடினர். மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன் கோவில்களில் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தமிழ் புத்தாண்டு தித்திக்க பொங்கல் வைத்து புத்தாண்டை கொண்டாடினார்கள். மேலும், மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல் மற்றும் சுவாமி ஊர்வலம், தமிழர் பாரம்பரிய இசை வாத்தியங்களுடன் நடந்தன.