உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பிரார்த்தனை: கிராமங்களில் நூதன வழிபாடு

மழை வேண்டி பிரார்த்தனை: கிராமங்களில் நூதன வழிபாடு

திருப்பூர் : வறட்சி நீங்க, மழை பெய்ய வேண்டுமென, கிராமங்களில், மழைச்சோறு எடுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைச்சோறு எடுத்தல், வீடுவீடாக சென்று, பழைய சோறு யாசகம் பெற்று, கிராமத்திள்ள கோவிலில் வைத்து வழிபாடு நடத்துவர். அதன்பின், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பிரார்த்தனை செய்து, அதனை சாப்பிடுவர். இவ்வாறு செய்தால், மழை வரும் என்பது அகை முடியாத நம்பிக்கையாக இன்றளவும் இருக்கிறது. அவ்வகையில், அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையம் மற்றும் மங்கலம், சுல்தான்பேட்டை கிராமங்களில், பொதுமக்கள் மழைச்சோறு எடுத்து, வழிபட்டனர். தேவம்பாளையத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்ற பெண்கள், பழைய சாதம் யாசகம் பெற்று ஊர்வலமாக, மழைப்பாடல் பாடியபடி சென்றனர்.அதன்பின், மாகாளியம்மன் கோவில் முன், கும்மியடித்து, மழை பொழிய இறைவழிபாடு நடத்தினர். பூஜை களுக்கு பின், அனைவரும் மழைச்சோறு சாப்பிட்டனர். மழை பெய்யாமல் வறட்சி நிலவுவதால், ஊரை விட்டு செல்வதாக, தங்களது உடமைகளை எடுத்து கொண்டு மக்கள் ஊரை விட்டு சென்றனர். ஊர் எல்லைக்கு சென்ற பெரியவர்கள், ‘மழை வழிபாடு நடத்தியுள்ளதால், கண்டிப்பாக மழை பெய்யும்; ஊருக்கு திரும்பி வாருங்கள்,’ என்று சமாதானம் செய்து, பொதுமக்களை அழைத்து வந்தனர்.

கிராம மக்கள் கூறுகையில், ‘இயற்கையை பகைத்து கொண்டதின் விளைவை, நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம். மரங்களை வளர்ப்பதும், நீர் வழித்தடங்களை ஆக்கிரமிக்காமல் இருப்பதுமே, மழையை வரவழைக்கும் முக்கிய விஷயங்கள். இதனை அனைவரும் கடைப்பிடித்தால், வான் மழை வரும். வறட்சி அறவே நீங்கும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !