வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 12 ல் நடக்கிறது. தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, காலை 8:30 மணிக்கு கன்னீஸ்வரமுடையார் கோயிலில் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு காலை 9:00 மணிக்கு கம்பம் நடப்பட்டது.
கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி., பாஸ்கரன், மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்கர் பழனியப்பன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக மே 12 ல் தேர் வடம் பிடித்தலும், 15 ல், தேர் நிலைக்கு வந்தடைதல் நிகழ்ச்சி, மே 16 ல் ஊர் பொங்கல் விழாவும் நடக்கிறது. கோயில் நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் கூறுகையில், திருவிழாவை முன்னிட்டு 21 நாட்கள் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருக்கும் பக்தர்கள் மே 9ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் அக்னி சட்டி எடுத்தல் , ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு வைத்தல், அலகு குத்துதல் மற்றும் முடி காணிக்கை செய்து நேர்த்தி கடன் செலுத்தலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் மே 7 ம் தேதிக்குள் நேர்த்தி கடனை நிறைவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.