உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தரிசனம் செய்ய காளஹஸ்தியில் கவுன்டர்!

திருமலையில் தரிசனம் செய்ய காளஹஸ்தியில் கவுன்டர்!

நகரி: காளஹஸ்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலைக்குச் சென்று வெங்கடேச பெருமாளை தரிசிப்பதற்கு வசதியாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், பிரசித்தி பெற்ற ராகு, கேது தலமான காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்கின்றனர். பின்னர் அங்கிருந்து திருமலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக காளஹஸ்தி கோவில் அருகே, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டு, சென்ற ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், காளஹஸ்தி கோவில் அருகே ராஜகோபுரம் இடிந்து விட்டதையடுத்து, கோவில் அருகே செயல்பட்டு வந்த திருப்பதி தேவஸ்தான டிக்கெட் கவுன்டர் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்தக் கவுன்டரை திறக்க வேண்டும் என, சமீபத்தில் காளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்த, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியத்திடம், இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர் அனுமதி வழங்கியதையடுத்து, காளஹஸ்தி கோவில் அருகே, ராமசேது பாலத்திற்கு அருகில் மீண்டும் கவுன்டர் திறக்கப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் வழங்கும் வசதியுள்ள இந்த கவுன்டரை, காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரி விஜயகுமார் நேற்று திறந்து வைத்து, பக்தர்களுக்கு டிக்கெட்டுகளை வினியோகம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !