ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு: வளம் பெருகும்
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது. இதனால், வளம் பெருகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். பக்தர்களின் கனவில் வரும் சிவன்மலை ஆண்டவர், குறிப்பால் உணர்த்தும் பொருள், கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜிப்பது நீண்ட நாளாக நடந்து வருகிறது.
கனவில் வந்த பொருளை, பக்தர்கள் எடுத்து வந்தால், அதை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என்று, சுவாமியிடம் பூ போட்டு, அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்பட்டு, புதிய பொருள் வைக்கப்படும். இங்கு இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் கவுரிசங்கர் கனவில், வலம்புரி சங்கு வைத்து பூஜிக்க உத்தரவானது. இதையடுத்து, நேற்று பூ போட்டு, ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், ’ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அது சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சிவபெருமானுக்கும், முருகனுக்கும் சங்காபிஷேகம் செய்யும், சங்கு வைக்கப்பட்டிருக்கிறது. நாடு தற்போது வறட்சியில் உள்ளது. இனி, சுபிட்சமாக மாறும்; மழை பெய்யும்; நாடு வளம் பெறும். சமுதாயத்தில் இதன் தாக்கம், போகப்போக தெரியவரும்’ என்றார்.கடந்த ஜன.,10ல், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னரே, சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.