பரமக்குடி கோயில்களில் ராமானுஜர் 1000 ஆண்டு ஜெயந்தி உற்சவ விழா
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி உற்சவம் நடந்தது. ராமானுஜர் சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் 1017ம் ஆண்டு பூமியில் அவதரித்தவர். இவர் அனைத்து மக்களும் சுவாமியின் திருவடியைஅடைய வேண்டும் என்ற நோக்கில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து மந்திரந்தை உபதேசித்துள்ளார். இவரது ஆயிராமாவது திரு அவதார உற்சவம் பரமக்குடி பெருமாள் கோயில்களில் கொண்டாடப்பட்டது.
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலை 8:00 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, 108 கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு யாகபூஜைகள்,மகாபூர்ணாகுதி நடந்தது. சுந்தரராஜப் பெருமாளுக்கும், ராமானுஜருக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் 11:00 மணிக்கு திருநாமம், சங்கு, கரம், கருட, அனுமன் கொடி முன் செல்ல,ராமானுஜர் எதிர்சேவை சாதித்த படி பெருமாள் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதி வலம் வந்தார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலும் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை வரதராஜப் பெருமாள், ராமானுஜர் வீதிவலம் வந்தனர்.
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா நடந்தது. காலை 9 மணியளவில் உற்சவர் ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணங்கள் செய்யப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடியவாறு மங்களா சாசனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் உற்சவர் ராமானுஜர் பல்லக்கில் வீதியுலா வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சிக்கல்: கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில், ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமானுஜர் இயற்றிய சரணாகதி கத்யம், வைகுண்ட, ஸ்ரீரங்க பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பக்தசபா தலைவர் நாராயணன், செயலர் சத்தியமூர்த்தி, மாதவ பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.