உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கன்னிக்கோவில் செல்வோமா

திருத்தணி கன்னிக்கோவில் செல்வோமா

திருத்தணி : கோடை விடுமுறைக்கு, சென்னைக்கு அருகில் உள்ள, இதுவரை  செல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்போர், திருத்தணி கன்னிக்கோவிலுக்கு, ஒரு நாள் சென்று வரலாம்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கன்னிக்கோவில், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ளது.  திருத்தணி - மாம்பாக்கம்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில்,  கன்னிகாபுரம் மேடு என்ற இடத்தில், இக்கோவில் அமைந்துள்ளது. மொத்தம், 7.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில், 25
வகையான, 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதுதவிர,  இங்கு ஏழு சுனைகள் உள்ளன. இதில், இரு சுனைகளில், எந்த காலத்திலும் வற்றாமல் தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கும்.
கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும், பெரிய, பெரிய மரங்கள்  மற்றும் பெரிய பாறைகள் உள்ளன.

கோடையிலும் குளுமை
கோடை வெயிலிலும், அதிகளவில் மரங்கள் உள்ளதால், கோவில்  வளாகத்தில் வெப்பமே இல்லாமல், குளு குளு என, இருக்கும். இதனால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, கோடை விடுமுறை மற்றும் முக்கிய விழாக்களின் போது, குடும்பத்துடன், கன்னிக்கோவிலுக்கு வந்து ஒரு நாள்  முழுவதும் தங்கி, இயற்கைசூழலுடன், பொழுது போக்கிக் கொண்டு  மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில், பக்தர்கள்  இக்கோவிலுக்கு வந்து, பொங்கல் வைத்து, ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு, அங்கேயே உணவு தயாரித்து, மூலவர் அம்மனுக்கு படைத்து, குடும்பத்துடன் உணவு சாப்பிட்டு, மாலை  வரை பொழுதை போக்குகின்றனர்.பெரிய மரங்களில் இருந்து  தொங்கும் வேரில், சுற்றுலா பயணியர், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உட்கார்ந்து, ஊஞ்சல் ஆடி மகிழ்கின்றனர்.

குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் வசதிக்காகவும், வளாகத்தில்  விளையாட்டு பூங்கா, கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு, ஓய்வுக் கூடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளது. அங்கு போதிய குடிநீர்,  மின்விளக்குகள் மற்றும் சிமென்ட் சாலை வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

தாழம்பூ வாசம்
கோவிலை சுற்றியும் தாழம்பூ தோட்டம் உள்ளதால், கோவில்  வளாகத்தில் நுழைந்தால், தாழம்பூ வாசம் வீசும். இந்த கோவிலில் இருந்து, அரை கிலோ மீட்டர் சென்றால், ஐந்தாம் படை வீடான,  திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று, முருகப் பெருமானை
வழிபடலாம். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் திருத்தணி நகரத்திற்கு  வந்தால், முருகப்பெருமானை தரிசிப்பதோடு, கன்னிக்கோவிலுக்கு சென்று, குடும்பத்துடன் ஒருநாள் பொழுதை போக்கலாம். - நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !