கரபுரநாதர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணிகள் விறுவிறு
உத்தமசோழபுரம்: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழாவையொட்டி, தேரை சுத்தம் செய்து, வார்னிஷ் அடிக்கும் பணி நடந்து வருகிறது. உத்தமசோழபுரம், பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலின் முக்கிய திருவிழாவான, சித்திரை தேரோட்ட விழாவுக்கான முகூர்த்தகால், ஏப்.,24ல், நடப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேர்களை, பொக்லைன் மூலம் வெளியே இழுத்து வந்து, கழுவி சுத்தம் செய்து, வார்னிஷ் அடித்து பளபளப்பாக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 8 காலை கொடியேற்றம் நடக்கிறது. தேரோட்டம் வரும், 10 மாலையில் நடக்க உள்ளது. இதற்காக தேருக்கு வார்னிஷ் அடித்த பின், சாரங்கள் கட்டி துணிகள் போர்த்தப்பட்டு, மஞ்சள் குங்குமத்தால் அலங்காரம் செய்யப்படும். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.