உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் கோவில் தீப கம்பத்தை வலம்வருவதை தடுக்கும் காரை அப்புறப்படுத்த கோரிக்கை

சேலம் கோவில் தீப கம்பத்தை வலம்வருவதை தடுக்கும் காரை அப்புறப்படுத்த கோரிக்கை

சேலம்: கோவில் தீப கம்பம் அருகே, இடையூறாக உள்ள காரை, அப்புறப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கருவறைக்கு நேர் எதிரே, வெளி வளாகத்தில், தீப கம்பம் உள்ளது. கோவில் நுழைவுவாயில் பகுதியில், 30 அடி உயரம் கொண்ட தீப கம்பத்தின் அடிப்பகுதியில் விநாயகர், நந்தி, முருகன், சூலதேவர் சிலைகள், அடுத்தடுத்து, நான்கு புறமும் அமைந்துள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலாவதாக, தீப கம்பத்தில், பொறிக்கப்பட்ட சுவாமி சிலைகளுக்கு, நெய்தீபம் ஏற்றி வணங்கி, வலம் வந்த பின்னரே, பிரகாரத்தில், அடியெடுத்து வைப்பர். ஆனால், தீப கம்பத்தை வலம்வர, பழைய கார் ஒன்று, முட்டுக்கட்டையாக இருப்பதாக, பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வேறொரு கோவில் வழக்கில், சம்பந்தப்பட்ட கார், தீப கம்பம் அருகே, பல ஆண்டுகளாக நிறுத்தி இருப்பதால், அதனருகே, கோவிலுக்கு வரும் பக்தர்களும் வாகனங்களை நிறுத்துவதால் இடையூறாக உள்ளது. அங்கு, நிறுத்தப்பட்ட காரை, உடனடியாக அப்புறப்படுத்தி, தீப கம்பத்தை, நிம்மதியாக வலம் வர, வழிவகை செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !