பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் திரளான பெண்கள் பங்கேற்பு
கோத்தகிரி : கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருவிழாவை ஒட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி கடைவீதி அருள்மிகு மாரியம்மன் திருவிழா, கடந்த, 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், மாரியம்மனுக்கு திருக்கல்யாணம், காமதேனு வாகன திருவீதி உலா, யானை வாகன திருவீதி உலா போன்ற நிகழ்வுகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, கோத்தகிரி வட்டார கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நலச்சங்கம் சார்பில், பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, கோத்தகிரி மகளிர் மன்றத்தினர், பக்தியுடன், பால்குடம் மற்றும் அக்னிசட்டியுடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பகல், 3:00 மணிக்கு, பகவத் சைதன்யா குழுவினரின், பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இருந்து, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், விழா குழவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, இன்று மாலை, 6:00 மணிக்கு, அம்மன் முத்துப்பல்லக்கு திருவீதி உலா நடக்கிறது.