சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் 23 ஆண்டாக நடந்த திருவிளக்கு பூஜைக்கு தடை
சேலம்: கடந்த, 23 ஆண்டுகளாக நடந்து வந்த, சித்ரா பவுர்ணமி பூஜையை, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடத்த, அறநிலையத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின் போது, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடத்துவர். கடந்த, 23 ஆண்டுகளாக நடத்தப்படும் இப்பூஜை, இந்தாண்டு வரும், 10ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவிலில் பாலாலயம் செய்துள்ளதால், திருவிளக்கு பூஜைக்கு அனுமதி மறுத்து விட்டனர். இது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் மாலா கூறியதாவது: தற்போது, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆகம விதிப்படி பாலாலயம் செய்த பின், கும்பாபிஷேகம் மட்டுமே செய்ய வேண்டும். அப்படியிருக்கும் போது, திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி கேட்டனர். மேற்கண்ட விபரங்களை, அவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். வேறு எதுவும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டை பெரியமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகி ரஜினிசெந்தில் கூறியதாவது: கடந்த, 23 ஆண்டுகளாக, தொடர்ந்து நடந்து வந்த திருவிளக்கு பூஜையை திட்டமிட்டு நிறுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால், ஆகமவிதியை மீறி அறநிலையத்துறையினர் மட்டும், நவராத்திரி பூஜை செய்தனர். பக்தர்கள் பூஜை செய்ய வந்தால், ஆகமவிதி எனக்கூறி தடுக்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தான், திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி கிடைக்கும் என்றால், அதையும் செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.