க.பரமத்தி மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்
ADDED :3192 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அருகே நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த, குப்பம் பஞ்சாயத்து, உப்புபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 16ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் கொடுமுடியில் இருந்து பக்தர்கள், காவிரியாற்றில் புனிதநீர் கொண்டு வந்தனர். மாலை, 5:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில், குப்பம், உப்புபாளையம், சாலிபாளையம், ஆண்டிசங்கலிபாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.