மழை பொழிய வேண்டி பெண்கள் நூதன வழிபாடு
பல்லடம் : மழை வேண்டி, வதம்பச்சேரியில் பெண்கள் ஊர்வலமாக சென்று, கோவிலில் கும்மியடித்து, வழிபாடு நடத்தினர். பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரியில், மழை வேண்டி பெண்கள் வழிபாடு நடத்தினர். ஊரின் மத்தியில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், இந்த வழிபாடு நடந்தது. மஞ்சளில் விநாயகர் செய்து, அதை சுற்றி வந்து, பாடல்கள் பாடினர்; கும்மியடித்தனர். அதை தொடர்ந்து, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து உணவு தயாரித்து, அம்மனை வழிபட்ட பிறகு, சாப்பிட்டனர். பொதுமக்கள் கூறியதாவது: கடுமையான வறட்சி நிலவுகிறது; தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு, மழை மட்டுமே. எனவே, மழை வேண்டி இந்த வழிபாட்டை நடத்தினோம். ஊரில் உள்ள வீடுகளுக்கு சென்று, பெண்கள் சிலர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பர். வீட்டில் இருப்பவர்களோ, தண்ணீர் இல்லை என்பர்; வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளதாகவும், மழைக்காக வேண்டிக் கொள்ளுமாறும் கூறுவர். அதை தொடர்ந்து, ஊர் பெண்கள், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஒன்று கூடி, இந்த வழிபாடு நடத்துவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.