உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி ஆட்சி துவக்கம்: விழாக்கோலம் பூண்டது மதுரை

மீனாட்சி ஆட்சி துவக்கம்: விழாக்கோலம் பூண்டது மதுரை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ’மீனாட்சி பட்டாபிஷேகம்’ நேற்று நடந்தது. அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன், செங்கோல் பெற்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோல் சமர்ப்பித்தார். மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு தங்கப் பல்லக்கில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் மேலமாசி வீதி திருஞான சம்பந்தர் சுவாமி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் எழுந்தருளினார். பட்டாபிஷேகம் நடக்கும் அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னொளியில் ஜொலித்தது. பட்டாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சள் பட்டு உடுத்தி, பச்சை பட்டு தலைப்பாகை, பாண்டியன் மன்னனை குறிக்கும் வேப்பம்பூ மாலை அணிந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் ஆறுகால் பீடத்தில் மாலை 5:00 மணிக்கு எழுந்தருளினார்.

காப்பு கட்டிய கணேசன் பட்டர், ஸ்தானிக பட்டர்கள் விநாயகர் பூஜை, புண்ணியாகா வாகனம், பஞ்ச கவ்யம், கும்ப பூஜைகளை நடத்தினர்.மீனாட்சி பட்டாபிஷேகம்பட்டத்தரசியாகும் அம்மனுக்கு ரத்தின கற்களால் இழைத்த ராயர் கிரீடத்திற்கு கும்பங்களில் இருந்து புனித நீராடல் நடத்தி தீபாராதனை நடத்தி அம்மனுக்கு சாற்றினர். ரத்தின கற்களால் இழைத்த செங்கோல் இரவு 7:05 மணிக்கு அம்மனிடம் வழங்கி மங்கல மேளம், சங்கொலி முழங்க அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மலர்கள் துாவப்பட்டன. சர்வ தீபாராதனைகள் நடந்தன. அம்மனிடம் இருந்து கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை இரவு 7:10 மணிக்கு பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். தீபாராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மீனாட்சி ஆட்சி துவக்கம் : சொக்கருடன் மண நாள் காணும் மங்கையர்க் கரசிக்கு பட்டாபிஷேகம் முடிந்ததால் மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மீனாட்சி பட்டத்தரசியானார். இதன்படி சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி துவங்கியதாக ஐதீகம். வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் நான்கு மாசி வீதிகளில் இரவு 9:00 மணிக்கு எழுந்தருளினர். மாசி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் அம்மன், சுவாமி பிரியாவிடையை தரிசனம் செய்தனர். திருவீதி உலா முடிந்து நள்ளிரவு 12:30 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தது. ஏற்பாடுகளை தக்கார், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.

மீனாட்சி அம்மன் ’திக்கு விஜயம்’ : மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில், திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் வடக்கு, கிழக்கு மாசி வீதி சந்திப்பு லாலா ரெங்க சத்திரம் திருக்கண் மண்டபத்தில் இன்று (மே 6) இரவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !