சிவாலயத்தில் "தாரா பாத்திரம்:மழை பெய்யுமென ஐதீகம்
திருப்பூர்: கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில், சிவாலயங்களில், "தாரா பாத்திரம் மூலம், குளிர்விக்கும் வகையில் நாள் முழுவதும் அபிஷேகம் நடைபெறுகிறது. அக்னி நட்சத்திரம், நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 28ம் தேதி வரை அக்னி வெயில் காலம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் வெளியில் நட மாட முடியாத அளவிற்கு உள்ளது. அக்னி வெயிலிருந்து, ஆண்டவனை குளிர்விக்கும் வகையில், சிவாலயங்களில், மூலவர் மீது, நீர் துளி விழும் வகையில், "தாரா பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதில், தண்ணீர், பன்னீர், வெட்டிவேர், வாசனை திரவியங்கள் கலந்து, மூலவர் மீது விழும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, டி.பி.ஏ., காலனி, காசி விஸ்வநாதர் கோவில், மூலவருக்கு தாரா பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதே போல், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அக்னி வெயில் அடித்து வருவதால், ருத்ராட்ச மாலைகளால், மூலவருக்கு மேல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாச்சார்யார்கள் கூறுகையில், "அக்னி வெயிலில் இறைவனை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தி, மூலவர் மீது, நீர்த்துளி விழ வைக்கப்படுகிறது. இறைவனே உலகம் என்பதால், பூமி குளிர வேண்டும்; மழை பொழிய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற நடைமுறை காலம்காலமாக செய்யப்படுகிறது, என்றனர்.