அவிநாசியில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், நாளை தேரோட்டம் நடக்கிறது.கொங்கு ஏழு சிவாலயங்களில் முதலானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் முதலை உண்ட பாலகனை மீட்ட சிறப்பு உடையதும், மாநிலத்தில் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமை பெற்றதுமான, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, 63 நாயன்மார்களுக்கு, பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும், வைபவம் நேற்று முன் தினம் இரவு கோலாகலமாக நடந்தது. நேற்றிரவு திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி ஆகியன நடந்தது.இன்று காலை, 5:30 மணிக்கு, பூர நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் தேருக்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
நாளை காலை, 9:00 க்கு, பக்தர்களால், தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதில், ஆதீனங்கள், அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர் பங்கேற்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு, சக்கரங்களுக்கு "ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளின் சார்பில், நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பூவாசாமி, தேவாங்கர், செங்குந்தர், குலாலர், கங்கவர் மற்றும் கோவம்சத்தார் ஆகிய திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தேரோட்டத்தின் போது, சில போக்குவரத்து மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.