ஊட்டி காந்தல் மூவுலகரசி அம்மன் தேர்த்திருவிழா
ஊட்டி : ஊட்டி காந்தல் மூவுலகரசி அம்மன் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஊட்டி அருகே காந்தல் பகுதி யில், மூவுலகரசி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், தேர்த் திருவிழாவையொட்டி, அப்பகுதி மக்கள் சார்பில், தினமும் உபயம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நடப்பாண்டின் விழாவை ஒட்டி, கடந்த ஏப்ரல், 20ம் தேதி திருவிளக்கு பூஜை, மகா சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேக குழுவினரால்,அபிஷேகமும் பால்குட ஊர்வலமும்நடந்தது.மாலை, 6:00 மணிக்கு நடந்த திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேர் வடம்பிடித்தனர்.
தெருவெங்கும் பக்தர்கள் நின்று, சிறப்பு அலங்காரத்தில் உலா வந்த அம்மனுக்கு உப்பு போட்டு சிறப்பு பூஜை செய்தனர். இன்று காலை, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், 9ம் தேதி மதுரைவீரன்
பூஜையும், 10ம்தேதி, கரக உற்சவமும், 11ம் தேதி விடையாற்றி உற்சவம் தொடர்ந்து, 12ம் தேதி, பகல், 12:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.