குளித்தலை அய்யர்மலை கோவிலில் இன்று தேரோட்டம்
குளித்தலை: குளித்தலை மகாமாரியம்மன், தோகைமலை கருப்புசாமி, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில்களில், திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
குளித்தலை மகாமாரியம்மன் கோவில், சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று இரவு பக்தர்களுக்கு பனிக்கட்டி அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார். கோவில் கருவறை
மற்றும் முன்பாகம் முழுவதும் பனிக்கட்டிகளால் அலங்காரம் செய்யப்பட்டதால், குளித்தலை சுற்றியுள்ள பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர். தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், கோட்டமேடு, புதுப்பாளையம் பக்தர்கள், பால் குடம்,
தீர்த்தக்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தோகைமலை கருப்புசாமி கோவில் திருவிழா, காப்புக்கட்டி பூப்போடப்பட்டது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், இருபிரிவினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக
திருவிழா தள்ளிப்போனது. பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, கருப்புசாமி திருவிழா, சுவாமிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடத்த, இந்துசமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர்
யுவராஜிடம் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, விழா துவங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை சுவாமி குட்டி குடித்தல், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
அய்யர்மலை, ரெத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் சித்திரைப் பெருவிழா முன்னிட்டு, இன்று காலை, 5:50 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மூன்றாம் நாள்
மாலை, திருத்தேர் நிலைக்கு வரும். நாளை திருக்குளத்தில் தீர்த்தவாரியும், நாளை மறுநாள் சுவாமி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டல் நிகழ்ச்சியும்
நடக்கிறது.