திண்டுக்கல் சித்திரைத் திருவிழா திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் - பத்மகீரிஸ்வரர் திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்.,24 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான
அபிராமியம்மன் - பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திருமணத்திற்கு பின்பு பெண்கள் தங்களது மாங்கல்ய கயிறுகளை மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாண பணிகளை
கோயிலின் தலைமை சிவாச்சாரியார் குருநாதன் தலைமையிலான 10 பேர் செய்திருந்தனர். அபிராமி அம்பிகையாக சந்தோஷ் சிவாச்சாரியாரும், பத்மகிரீஸ்வரராக சண்முகம்
சிவாச்சாரியாரும் பூஜைகள் செய்தனர். அறங்காவலர்கள் வேலுச்சாமி, கந்தசாமி, வெங்கடேஷ், செயல் அலுவலர் வேல்முருகன், அலுவலர் ஜெயபிரகாஷ், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
திருமாங்கல்யம், அபிராமி குங்குமத்துடன் கூடிய பிரசாதம் பொருட்கள் 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. பின், அபிராமி - பத்மகிரீஸ்வரர் தம்பதி சமேதர வீதியுலா நடந்தது. இதில்
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி: பழநி லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது.பழநி மேற்குரதவீதியிலுள்ள லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரைதிருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு, லட்சுமி நாராயணப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து, கும்ப கலச பூஜையுடன், மங்களவாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடுநடந்தது. மே 9ல் தேரோட்டம் நடக்கிறது.
ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர் மேனகா செய்கின்றனர்.பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள்,
தாயார்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது.சித்தரேவு வரதராஜப் பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா திருக்கல்யாணத்துடன் துவங்கியது. காலை 10:30 மணிக்கு வேதபாராயணங்கள் முழங்க பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. அர்ச்சகர்கள் ராஜநரசிம்மன், சுந்தரமூர்த்தி ஆகியோர் திருமாங்கல்யம் கட்டி திருக்கல்யாணத்தை நடத்தினர்.
ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர். மலர் பந்தல் அலங்காரத்தில் பெருமாள், தேவியர்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கர் கணபதி முருகன், நிர்வாக அதிகாரி மகேந்திரபூபதி, தலைமை எழுத்தர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா ஏப். 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமஅழகர் கோயில், கோட்டை மந்தை மைதானம், கடைவீதி, நடூர் சவுடம்மன் கோயில் ஆகிய இடங்களில் கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
முன்னதாக அம்மன், சுவாமி அழைப்புடன், விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர் நடைபெற்ற திருக்கல்யாணத்தில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சித்திரை திருவிழாவின் சிறப்பம்சமான சஞ்சீவி நதியில் ராமஅழகர் இறங்குதல், மே 10ல் சித்திரா பவுர்ணமியன்று நடக்கிறது. மே 14ல், மோகினி, தசாவதாரக்காட்சி நடைபெறும்.