கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை
ஸ்ரீவில்லிபுத்துார்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை மதுரை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, வஸ்திரம் மற்றும் மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. நேற்று மதியம்3:30 மணிக்கு ஆண்டாள் கோயில் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, வஸ்திரங்கள் சாற்றி, மங்கள பொருட்கள் படைத்து, சிறப்பு பூஜைகளை கோவிந்தராஜ பட்டர் செய்தார். பின் மங்களப்பொருட்கள் ஸ்தானிகம் கோவிந்தன் தலைமையில் மாடவீதிகள் சுற்றி வந்து, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலுள்ள விடயத்து மண்டபங்களில் மங்கள பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்றிரவு 8:00 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு சென்றடையும். அதனை எதிர்கொள்ளும் கள்ளழகர், இன்றிரவு நடைபெறும் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அதனை அணிந்து, நாளை காலை வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான் சுதர்சனன், மணியம் ஸ்ரீராம், ஸ்தானிகம் ரமேஷ், கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.