அவிநாசியில் தெப்போற்சவம் ரத்து: பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பூர் : தண்ணீர் விட முடியாததால், அவிநாசி கோவிலில் தெப்போற்சவம் நடப்பாண்டு நிறுத்தப்பட்டது. இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘காசியில் வாசி அவிநாசி’ என்ற சிறப்புடைய அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடக்கும். அதில், 1980 முதல் 2011ம் ஆண்டு வரை, தெப்பக்குளத்தில் நீரின்றி, தெப்பத்தேர் நடத்தப்படவில்லை. ஆண்டுக்கணக்கில் பயன்பாட்டில் இல்லாததால், குளம் பாழடைந்திருந்தது. சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் முன் வந்து, 2012ல், குளத்தை தூர் வாரி, கான்கிரீட் தளம் அமைத்து, குளத்து நீர், நிலத்தில் இறங்காமல் இருக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின், 2012 முதல், கடந்தாண்டு வரை, தெப்பத்தேர் விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. நடப்பாண்டு, கோவிலில் உள்ள ஆழ் குழாய் கிணற்றில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தெப்பத்தேர் உற்சவத்துக்கு முதல் நாளே, குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு தண்ணீர் பற்றாக்குறையால், தெப்போற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘குளத்துக்கு விட போதுமான அளவு தண்ணீர் இல்லை. விழா ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட லோடு லாரி தண்ணீர் தேவை. லாரி தண்ணீர் விற்பனைக்கு தடை உள்ளதால், அதற்கான வாய்ப்பும் குறைவு என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். எனவே, தெப்போற்சவம் நடத்த வாய்ப்பில்லை,’ என்றனர். பக்தர்கள் கூறுகையில், ‘தெப்போற்சவம் நடத்துவது என்பதே, மழை பெய்யவும், நீர் வளம் பெருகவும், இறைவன் அருள் வேண்டித்தான். ஆனால், அதற்கே தண்ணீர் இல்லை என்று கூறி, தெப்போற்சவத்தை ரத்து செய்வது என்பது, இறைவனுக்கே சோதனை என்பது போல் உள்ளது.‘அதிகாரிகள், முன்னதாகவே மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். விழா ரத்தானது, வேதனையாக உள்ளது,’ என்றனர்.