குன்னூர் தேர்த்திருவிழாவில் முளைப்பாரி உற்சவம் கோலாகலம்
குன்னூர்: குன்னூரில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், முளைப்பாரி உற்சவத்தில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் பங்கேற்றனர்.குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம், 7ல் துவங்கி நடந்து வருகிறது. இதன்
ஒருபகுதியாக, சித்திரை திருவிழா மற்றும் முளைப்பாரி உற்சவம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு குன்னூர் சிவசுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து
துருவம்மன் கோவிலில் இருந்து பரிவட்டம் சார்த்தப்பட்டது.
இதில், மொடா மத்தளம் முழங்க, பக்தர்கள் ஆடல் பாடல்களுடன், முளைப்பாரிகளை எடுத்து வந்தனர். மவுன்ட்ரோடு வழியாக சென்ற ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. விழாவை யொட்டி, அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் வீர வாளுடன் குதிரையில் வந்த பக்தர் மற்றும் காளி அலங்காரத்தில் பக்தர்கள் வலம் வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
விழாவில், குன்னூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.