உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி தவளைக்கு தாலி கட்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு

மழை வேண்டி தவளைக்கு தாலி கட்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு

ஆரணி: ஆரணி அருகே, மழை வேண்டி வேலப்பாடி கிராம மக்கள், ஏரி மதகுக்கு சிறப்பு பூஜை செய்து, தவளைக்கு தாலி கட்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வேலப்பாடி கிராமத்தில் உள்ள ஏரி, நீரின்றி வறண்டுள்ளதால், குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வறட்சி காலங்களில், அக்கிராம மக்கள் ஏரிக்குச் சென்று, வருண பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல், நேற்று மாலை, 6:30 மணிக்கு வழிபாடு நடத்தினர். அப்போது கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அமைந்துள்ள எட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தனர். பின், அங்கேயே பச்சரிசி பொங்கல் செய்து, அதனுடன் கருவாடு குழம்பு வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். பின், ஏரி மதகிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை நடத்தினர். பின், எட்டி அம்மன் கோவில் பூஜாரி மணி, தவளைக்கு தாலி கட்டி, அதை மதகின் வழியாக ஏரிக்குள் விட்டார். தொடர்ந்து, வருண பகவானிடம் மழை வேண்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதில், அக்கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !