சேலம் கோவில்களில் 4வது ஆண்டாக அம்போவாகும் வைகாசி தேரோட்டம்
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர், பெருமாள் கோவில்களில் வைகாசி தேரோட்டம், நான்காவது ஆண்டாக நிறுத்தப்படுவதற்கு, அதிகாரிகளின் அக்கறையின்மையே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சேலம், சுகவனேஸ்வரர், கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். சேலம், ராஜகணபதி கோவில் அருகில் இருந்து துவங்கி, நான்கு வீதிகள் வழியாக வலம் வரும் தேர், இறுதியாக தேரடியில் நிறுத்தப்படுவது வழக்கம். இரண்டு கோவில்களின் தேர்கள் பழமையான நிலையில், கடந்த, 2012ல் சுகவனேஸ்வரர் கோவில் தேர் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்ட அதே ஆண்டில், பெருமாள் கோவில் தேரை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு இயக்கியது. அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். 2013ல், இரண்டு தேர்களுமே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மூன்று ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு தேரோட்டம் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு தலா, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேருக்கான பணிகள் ஓராண்டாக, ஆமை வேகத்தில் நடப்பதால், நடப்பாண்டும் தேரோட்டம் நடத்துவது கேள்விக்குறியாகி விட்டது. இதனால், கடந்த ஆண்டுகளை போல், இந்த ஆண்டும் கோவில் நிர்வாகங்கள் சார்பில், பழைய தேர்களுக்கு பூஜை மட்டுமே நடத்தப்படும் என, தெரிகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சேலத்தின், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர், பெருமாள் கோவில்களின் வைகாசி தேரோட்டம் நிறுத்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், புதிய தேரின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இரண்டு தேர்களின் பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கியதால், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. தேர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததாலே, நான்காவது ஆண்டாக தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.