காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சித்திரகுப்தர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில் ஒன்றான, சித்திர குப்தர் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 5:30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கோவில் வெளிபுறத்தில் இருபுறமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் பாதுகாப்புக்காக இங்கிருந்து போலீசார் நேற்று அனுப்பப்பட்டதால், இந்த திருவிழாவிற்கு பாதுகாப்பு குறைவாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த, போதிய பாதுகாப்பு போலீசார் இல்லாததால் பக்தர்கள் முண்டியடித்து சென்றனர்.
வசதி குறைவு: பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யாததால் பக்தர்கள் அவதியுற்றனர். சுட்டெரிக்கும், கத்திரி வெயிலில் நின்ற, பக்தர்களுக்கு போதுமான அளவு, நிழல் தரும் பந்தல் அமைக்கவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க மொபைல் டாய்லட் வைக்கவில்லை. பாதுகாப்பு போலீசார் கோவில் அருகில் மட்டுமே இருந்தார்களே தவிர, பக்தர்கள் நிற்கும் வரிசையின் கடைசி வரை பாதுகாப்பு அளிக்கவில்லை. இயற்கை உபாதைக்காக ஆண்கள் ஒதுக்குப்புறமாக இடங்களை தேடிச்சென்றனர்.
நிர்வாகம் மெத்தனம்: பெண்களின் நிலையோ பரிதாபமாக இருந்தது. காஞ்சிபுரம் உள்ள கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேக விழாக்களின், பக்தர்களின் வசதிக்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில், மொபைல் டாய்லெட் அமைக்கப்படும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது, இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதில், கோவில் நிர்வாகம் மெத்தனமாக இருந்தது பக்தர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை. தனியார் அமைப்பு மற்றும் பக்தர்கள் தான் வாட்டர் பாக்கெட், மோர், அன்னதானம் வழங்கினர். இயற்கை உபாதைகளை கழிக்க, மொபைல் டாய்லெட் இல்லாததால், பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படவில்லை. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோமதீஸ்வரி குமரவேல், வியாசர்பாடி, சென்னை
பேரக்குழந்தைகளுடன், காலை, 10:00 மணிக்கு கோவிலுக்கு வந்தேன். அப்போது, கிழக்கு ராஜ வீதியில் உள்ள, பெட்ரோல் பங்க் வரை பக்தர்களின் வரிசை இருந்தது. கோவிலுக்கு செல்வதால், காலணிகளை காரிலேயே வைத்துவிட்டு வந்து விட்டோம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வெறும் கால்களுடன் குழந்தைகளால் நிற்க முடியவில்லை. கோவில் அருகில் மட்டுமே, பந்தல் அமைத்திருந்தனர். தெரு முழுவதும் பந்தல் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுவாமி தரிசனம் செய்ய பகல், 1:30 மணி ஆகிவிட்டது.
வசந்தா தணிகாசலம், திருமுல்லைவாயல், சென்னை.