மயிலம்பாடி கரியகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன்
பவானி: பவானி அடுத்த, மயிலம்பாடியில், கரியகாளியம்மன், மகாமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பவானி, மயிலம்பாடி, கொண்டுரெட்டி பாளையம் கிராமத்தில் கோவில் கொண்டுள்ள கரியகாளியம்மன், மகாமாரியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த ஏப்., 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்று காலை முப்போடு, படைக்கலம் அழைத்தல், திருட்டுக் கருமலை ஆண்டவரை அழைத்து வருதல், குதிரை துளிக்கு பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அடுத்து, செலம்பூரம்மனை அழைத்து வந்து, கோவில் பூசாரி முதலில் இறங்கி குண்டம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். இக்கோவில் குண்டம், 75 அடி நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை, 9:00 மணியளவில், கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.