உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலை தேரோட்டம்: சப்பரத்தில் நடத்தியதால் எதிர்ப்பு

சுவாமிமலை தேரோட்டம்: சப்பரத்தில் நடத்தியதால் எதிர்ப்பு

தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில், கடந்த ஆண்டு பழுதான தேர், சரி செய்யப்படாத நிலையில், நேற்று சித்திரை விழாவில், சிறிய தேரான, சப்பர ஓட்டம் நடந்தது; இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள், சப்பரத்தை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை முருகன் கோவிலுக்கு கார்த்திகை தேர், சித்திரை தேர் என, இரண்டு தேர்கள் உள்ளன. கடந்த ஆண்டு சித்திரை விழாவின்போது, தேர் பழுதானது. பின், இந்த தேரை, முழுமையாக சீரமைக்கவில்லை. சுவாமிமலையில், நேற்று நடந்த சித்திரை தேரோட்டத்துக்கு, சித்திரை தேருக்கு பதிலாக, சப்பரம் இழுக்கப்பட்டபோது, பக்தர்கள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, சப்பரத்தை முற்றுகையிட்டனர். தேர் பழுதாகி ஓராண்டாகியும், சீர் செய்வதற்கு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சித்திரை தேருக்கு பதில், கார்த்திகை தேரை பயன்படுத்தியிருக்கலாம் என, பக்தர்கள் கூறினர். இதனால், சப்பரம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. அடுத்தாண்டு சித்திரை விழாவுக்கு தேர் சீரமைக்கப்படும்; இனி மேல் தேரோட்டத்திற்கு சப்பரத்தை பயன்படுத்துவதில்லை என, கோவில் நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து காலை, 9:15 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க, பக்தர்களால் சப்பரம் இழுக்கப்பட்டு, நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !