வேலூரில் 7 புஷ்ப பல்லக்கு ஊர்வலம்: ஒரு லட்சம் பேர் சுவாமி தரிசனம்
வேலூர்: வேலூரில் நடந்த, புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில், ஒரு லட்சம் பேர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலூரில், புஷ்ப பல்லக்கு ஊர்வலம், பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, வேலூர், மண்டித்தெருவில் இருந்து புஷ்ப பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட புஷ்ப பல்லக்கில், அகிலாண்டேஸ்வரர் சமேத ஜலகண்டேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் உற்சவ மூர்த்திகள் வந்தன. இதேபோல், வேலூர் அரிசி மண்டி வியாபாரிகள், வெல்ல மண்டி வியாபாரிகள், வேலூர் அரசமரப்பேட்டை புஷ்ப வியாபாரிகள், புஷ்ப அலங்கார தொழிலாளர்கள் சார்பில், ஏழு புஷ்ப பல்லக்குகள், அந்தந்த கோவில்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, வேலூர் மண்டி தெருவுக்கு வந்தன. இதில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் உள்பட, ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை, 8:00 மணிக்கு அங்கிருந்து ஊர்வலமாக, அந்தந்த கோவில்களுக்கு புஷ்ப பல்லக்குகள் சென்றடைந்தன. வேலூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் தலைமையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.